நாகை: பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை; வேன் ஓட்டுநர் கைது

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுமோகன். சொந்த வேன் உரிமையாளரான இவர், தினமும் அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். வேனில் புதன்கிழமை காலை மாணவ, மாணவிகளை ஏற்றிச்சென்ற மதுமோகன், பிளஸ் 1 பயிலும் 16 வயது மாணவியைத் தவிர்த்து, மற்றவர்களைப் பள்ளியில் இறக்கி விட்டுள்ளார். 

பின்னர், அந்த மாணவியிடம், வேனில் வரும் மாணவ, மாணவிகளின் பெயர்களைப் பதிவேட்டில் எழுதும் வேலை இருப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றுள்ளார். அவையாம்பாள்புரம் பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் வேனை நிறுத்திய மதுமோகன், வாகனத்தின் உள்ளேயே அந்த மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டாராம். இதையடுத்து மாணவி சத்தமிட்ட நிலையில், மீண்டும் பள்ளியில் விட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து, மாணவி பள்ளி ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். 

ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் உண்மை இருப்பதாகத் தெரிய வந்த நிலையில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மதுமோகனை கைது செய்தனர். இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி