சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பி: ட்விஸ்ட்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் என்பவர் கடந்த 17ஆம் தேதி அவரது அலுவலக வாகனம் பறிக்கப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

தனக்கு தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படுத்துவது தொடர்பாக தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், உளவுப்பிரிவு ஐஜி செந்தில் வேல், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், உளவுப்பிரிவு ஆய்வாளர் பாலச்சந்தர் ஆகியோர் மீது நேரடி குற்றச்சாட்டுகளை டிஎஸ்பி சுந்தரேசன் வைத்திருந்தார். 

சுந்தரேசன் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மயிலாடுதுறை தனிப்பிரிவு ஆய்வாளர் பாலச்சந்திரனை வடக்கு மண்டலத்துக்கு பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள டிஎஸ்பி சுந்தரேசன், "தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மமே மறுபடி வெல்லும், வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி