மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி தனியார் அரசு உதவி பெறும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. செவித்திறன், இயக்கத்திறன், அறிவுசார் குறைபாடுடையோர், மூளை முடக்குவால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வை குறைபாடு உடையோர் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 10 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு கைகளையும் இழந்த கல்லூரி மாணவி காலால் ஓவியம் வரைந்து அனைவரையும் கவர்ந்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.