சீர்காழி: ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்

சீர்காழி நகராட்சிக்குள்பட்ட 24 வார்டுகளில் தூய்மைப் பணிக்காக தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 70 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு பிப்ரவரி மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊதியம் தனியார் ஒப்பந்ததாரர் தான் வழங்க வேண்டும், உரியத் தொகைக்கு காசோலையாக ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில், தனியார் ஒப்பந்ததாரர் பிப்ரவரிக்கு வழங்கவேண்டிய தொகையில் பாதி மட்டுமே நகராட்சி கொடுத்துள்ளதாக தூய்மைப் பணியாளர்களிடம் தெரிவித்தார். இதில், ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள் மாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சீர்காழி காவல் ஆய்வாளர் புயல். பாலசந்திரன் அவர்கள் பேசினார்.

 தொடர்ந்து நகராட்சி ஆணையர் மஞ்சுளா மற்றும் அதிகாரிகளை அழைத்து காவல் துறையினர் விவரங்களை கேட்டு தனியார் ஒப்பந்ததாரர், நகராட்சி நிர்வாகம் பேசி முடிவு செய்து வெள்ளிக்கிழமை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள நிலுவையை வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி