மயிலாடுதுறை: இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். முட்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சாராய வியாபாரிகள் மூவேந்தன், தங்கதுரை, இவர்களது உறவினர் ராஜ்குமார் ஆகிய 3 பேரும், கடந்த 14-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் தினேஷ் என்பவரிடம் தகராறு செய்து, கத்தியால் குத்த முயன்றனர். 

அப்போது, தினேஷின் நண்பர்களான முட்டம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ், அவரது சகோதரர் அஜய், கல்லூரி மாணவரான மயிலாடுதுறை சீனிவாசபுரம் ஹரிசக்தி ஆகியோர் தடுத்தபோது, 3 பேரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பெரம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், முட்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கலையரசன் மகன் சஞ்சய் (22) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை, திருச்சம்பள்ளி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி