ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

ஆண்டுக்கு 23 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நாகை ரயில் நிலையத்தை தென்னக ரயில்வே நிர்வாகம் புறக்கணிப்பதாகக் கூறி, நாகையில் இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தினர் கடையடைப்பு மற்றும் ரயில் போராட்டத்தை அறிவித்துள்ளனர். நாகை - தஞ்சாவூர் இடையே இருவழிப் பாதையாக ரயில் சேவையை விரிவுபடுத்த வேண்டும், சென்னை எக்மோர் வரை செல்லும் கம்பன் ரயிலை நீட்டிக்க வேண்டும், வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ரயில் சேவைகளை நாகையில் இருந்து விரிவுபடுத்த வேண்டும், நாகையில் இருந்து மதுரைக்கு ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாகை, வெளிப்பாளையம் பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் சங்கத்தினர் எர்ணாகுளம் ரயிலை மறிக்க முயன்றபோது காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி