நாகை: பெண் சடலத்தின் எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை

நாகை அருகே வாய்க்கால் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலத்தின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்துகின்றனர். 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பாலக்குறிச்சி வயல்வெளி அருகிலுள்ள வாய்க்காலின் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எலும்புக்கூடாக கிடந்தது. அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் சடலத்தைப் பார்வையிட்டனர். சடலம் அழுகி எழும்புக்கூடாக கிடப்பதால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாத சூழலில் சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் உடல் கூறாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இறந்தவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியாத சூழ்நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சடலத்தின் அருகே பெண்ணின் செருப்பும் கழுத்தில் செப்பு மாலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாகை அருகே வாய்க்கால் புதரில் பெண்ணின் சடலம் அழுகி எழும்புக்கூடாக கிடப்பது அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி