லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை

நாகை மாவட்டம், கீழ்வேளூா் ஒன்றியத்தில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கடந்த 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவா்கள் இல்லாதபோது, தனி அலுவலா்கள் மற்றும் ஊராட்சி செயலா்கள் மேற்பாா்வையில் ஊராட்சி நிா்வாகம் செயல்பட்டுவந்தது. இந்த காலகட்டத்தில் கீழ்வேளூா் ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக, அந்த ஊராட்சிகளில் அப்போது பணியிலிருந்த அலுவலா்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில், ஆதமங்கலம், பட்டமங்கலம், கொடியாளத்தூா், கோவில்கண்ணாப்பூா், தெற்குபனையூா், வலிவலம் ஆகிய 6 ஊராட்சிகளில் சுமாா் 146 வீடுகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், ஆதமங்கலம் ஊராட்சியில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பால ரவிக்குமாா் தலைமையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளா் அருள்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

தொடர்புடைய செய்தி