குடமுழுக்கு பெருவிழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் 8ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்றதை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் கடங்களை கோவிலை சுற்றி கோபுரத்திற்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். திமுக அரசு பொறுப்பேற்று 3000வது கும்பாபிஷேக விழாவை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ராஜகோபுரம் உள்ளிட்ட மூலஸ்தானத்திற்கு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பன்னிரு திருமுறைகள் தமிழில் வேத மந்திரங்கள் ஓதி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர்.
பின்னர் பக்தர்கள் மேல் ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. தமிழக அரசு பொறுப்பேற்றதில் முதல் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் 3000வது குடமுழுக்கு பெருவிழா என்பதால், தமிழக பொதுக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு மீன்வளர்ப்புக் கழக தலைவர் கௌதமன் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்காலை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.