மதுரை: ரவுடி வெட்டிப் படுகொலை..பகீர் சம்பவம்

மதுரை கரிமேடு சகாய மாதா தெரு பகுதியைச் சேர்ந்தவர் குட்டிச்சாக்கு என்ற அஜய் பிரசன்ன குமார். இவர் மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் 4 நாட்களுக்கு முன்பாக சிறையிலிருந்து ஜாமினில் வெளியில் வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 10) அதே பகுதியைச் சேர்ந்த குட்டிச்சாக்கு அஜய்குமாரின் நண்பரான தனசேகரன் என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கி விட்டதாக கூறியதால் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பலானது அஜய்குமாரின் தாயாரிடம் உனது மகனை ஒழுங்காக இருக்க சொல் என எச்சரித்து சென்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று (ஜூன் 11) இரவு அஜய்குமார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது அண்ணன் மற்றும் தாயார் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் சென்ற மர்ம கும்பலானது கதவை உடைத்து வீட்டிற்குள் தூங்கிய அஜய்குமாரை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். 

இதனையடுத்து வீட்டிற்குள் தாயார் வந்துபார்த்தபோது அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அஜய்குமாரின் குடும்பத்தினர் கரிமேடு காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அஜய்குமாரின் உடலை கைப்பற்றி கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி