மதுரை: கைகளில் வாழை மற்றும் நெற்பயிர்களை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட மேலூர், நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, வெள்ளாளப்பட்டி, கிடாரிப்பட்டி, வெள்ளரிப்பட்டி, நரசிங்கப்பட்டி, கள்ளம்பட்டி, சூரக்குண்டு, எட்டிமங்கலம், புலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பான ஏல அறிவிப்பு மத்திய சுரங்கத்துறை அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. 

இந்த கனிமவள ஏலத்தில் வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்த ஏல அறிவிப்பிற்கு எதிராக மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் டங்ஸ்டன் ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் மதுரை மேலூர் சுற்றுவட்டார பகுதியில் டங்ஸ்டன் கனிமவள சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் மற்றும் கிராமத்தினர் தங்களது கைகளில் வாழை மற்றும் நெற்பயிர்களை வைத்தபடியும், ஏர் கலப்பையை கையில் வைத்தபடியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி