மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சு; அதிர்ச்சி தகவல் (VIDEO)

மதுரை மாநகர் மிளகரணை அருகேயுள்ள செல்வபூமி நகரில் உள்ள காருண்யா என்ற பெயரில் டேனியல் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் மற்றும் ரெடிமேட் மரக்கதவுகள் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு கதவுகளுக்கு ஒட்டுவதற்காக பசை ('பேஸ்ட்') டப்பாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பயன்படுத்தப்பட்ட பின்னர் குறைந்த அளவு பேஸ்ட் டப்பாக்களை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இலவசமாக வாங்கிச் செல்வார்கள். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இரண்டு சிறுவர்கள் வந்து கேட்டபோது காலி டப்பா இல்லை என ஊழியர்கள் தெரிவித்ததும் சிறுவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுச் சென்றுள்ளனர். 

கதவுகளுக்கு ஒட்டும் பேஸ்டுகளை போதை பயன்பாட்டுக்காக பயன்படுத்துவது தெரிய வந்ததால் சிறுவர்களுக்கு வழங்காமல் அனுப்பி வைத்துள்ள நிலையில் நேற்று அதிகாலை பீர் பாட்டில்களில் முழுவதுமாக பெட்ரோலை நிரப்பி வந்து கதவுகள் தயாரிக்கும் நிறுவனத்தின் மீது சிலர் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இதில் பெட்ரோல் பற்றி எரிந்ததில் வாகனத்தின் மீது பட்டு டயர் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. போதைக்காக பயன்படுத்தி வந்ததை அறிந்த உரிமையாளர் பேஸ்ட் டப்பாக்களை தரமாட்டேன் என கூறியதால் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மூன்று சிறுவர்கள் பிடிக்கப்பட்டு கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி