மதுரை: பயிர் கடன் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் அளித்த மனு: அரசுடைமை வங்கிகளில் நகைக் கடன், கல்விக் கடன், விவசாயம் சார்ந்த சிறு, குறுந் தொழில் கடன் பெற்று, போதுமான வருவாய் இல்லாததால் சரிவர திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகளில் பலர் சிவில் பிரச்னையில் சிக்கினர். இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலமான பயிர்க் கடன் மட்டுமே விவசாயிகளுக்கு உதவியாக உள்ளது. 

இதேபோல், விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்பை ஈடு செய்ய அவ்வப்போது அரசு பயிர்க் கடன் தள்ளுபடி அளிப்பதும் ஆறுதலாக உள்ளது. இந்த நிலையில், கூட்டுறவு சங்க பயிர்க் கடன்களுக்கு விவசாயிகளின் சிவில் அறிக்கை அவசியம் என கூட்டுறவுத் துறை பதிவாளர் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது, தமிழகத்தின் வேளாண் உற்பத்தியில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இந்த சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி