மதுரை: ஜிம்மில் உடற்பயிற்சி செய்ததை வீடியோ எடுத்த இளைஞர்

மதுரை மாநகர் விஸ்வநாதபுரம் மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவருக்குச் சொந்தமான உடற்பயிற்சிக்கூடத்தை (ஜிம்) தற்போது அவரது சகோதரர் கார்த்திகேயன் என்பவர் பராமரித்து வருகின்றார்.

இந்நிலையில் போனிக்ஸ் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 9ஆம் தேதி பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அதே ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த புதூர் கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (24) என்ற இளைஞரும் உடற்பயிற்சி செய்துகொண்டே தனது செல்போனில் வீடியோ பதிவுசெய்துள்ளார். அதனைப் பார்த்த பெண் மருத்துவர் சிலம்பரசனிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது சிலம்பரசன் அவர்களுடன் வாக்குவாதம் செய்து மருத்துவரை ஆபாசமாகத் திட்டி மிரட்டியுள்ளார்.

பின்னர் உடற்பயிற்சி மையத்தில் இருந்த CCTV கேமராவை ஆய்வு செய்தபோது செல்போன் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் சிலம்பரசன் மருத்துவரிடம் தான் வீடியோ எடுத்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரிய நிலையில் பெண் மருத்துவர் புகார் அளிக்க விருப்பமில்லை என கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

ஆனால் உடற்பயிற்சிக் கூடத்தில் இதுபோன்று பெண் மருத்துவர் உடற்பயிற்சி செய்ததை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து அதைக் கேட்டபோது அவரை ஆபாசமாகத் திட்டி மிரட்டல் விடுத்ததாகக் கூறி சிலம்பரசன் மீது உடற்பயிற்சிக்கூட பராமரிப்பாளர் கார்த்திகேயன் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி