மதுரை: தனியார் நிதி நிறுவன மேலாளரை கொல்ல முயன்ற இருவர் கைது

மதுரை ஜெயிந்துபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (40). இவர் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் கடன் பெற்று இரு சக்கர வாகனத்தை வாங்கினார். இதற்கான, தவணைத் தொகையை அவர் பல மாதங்களாகச் செலுத்தவில்லை. இதனால், நிதி நிறுவன ஊழியர்கள் அவரது இரு சக்கர வாகனத்தை கடந்த வாரம் பறிமுதல் செய்தனர். ஆத்திரமடைந்த பாண்டியன், தனது நண்பர் காளிகுமாருடன் தல்லாகுளத்தில் உள்ள நிதி நிறுவனத்துக்கு மது போதையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திங்கள்கிழமை சென்றார். 

அப்போது, அந்த நிதி நிறுவன மேலாளர் பிரகாஷ் அலுவலகத்தின் எதிரே உள்ள தேநீர்க் கடைக்குச் சென்ற நிலையில், அவரைப் பாண்டியனும், காளிக்குமாரும் பின் தொடர்ந்து சென்றனர். இவர்களைப் பார்த்தவுடன் ஓடிய பிரகாஷை இருவரும் கத்தியுடன் துரத்திச் சென்றனர். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து தல்லாகுளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, பாண்டியன், காளிகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி