மதுரை: ரயிலில் கஞ்சா கடத்தல்.. 3 பேர் கைது

மதுரை ரயில் நிலையத்தில் நாள்தோறும் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடக்கூடிய பயணிகளிடம் ரயில்வே மற்றும் இருப்புபாதை காவல்துறையினர் அவர்களின் உடமைகளை சோதனை நடத்தி வருகின்றனர்.

ரயில்களில் பயணிகள் மூலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினரும் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மேற்குவங்களம் புருளியா - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை ரயில்வே நிலையத்திற்கு வந்தபோது கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பயணிகளை பிடித்து அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர்.

அப்போது அவர்களது கைப்பைகளில் சுமார் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் ராஜா, அஜித்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவர் ஆகிய மூவரையும் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை இருப்புபாதை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கடத்திவரப்பட்டு அவைகளை இளைஞர்கள் மற்றும் மாணாக்கர்களை குறிவைத்து சில்லறையாக விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி