மதுரை: மாடுபிடி வீரரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக சார்பில் மதுரை மேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் வகையில், அலங்கானல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டம், கச்சிராயிருப்பைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மகேஷ்பாண்டி (21) பங்கேற்றார்.

 இவர் காளையை அடக்குவதற்காக வாடிவாசல் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, வாடிவாசலிலிருந்து பாய்ந்து வந்த ஒரு காளை இவரது மார்பில் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த மகேஷ்பாண்டியை செஞ்சிலுவைச் சங்கத்தினர் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து அலங்கானல்லூர் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் உடலை வாங்க மறுத்து இன்று மதுரை கோரிப்பாளையம் சாலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மறியலில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். காவல்துறை வாகனம் மீது கல்வீசியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி