மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி மனு

மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மீ.த.பாண்டியன், வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், சே.வாஞ்சிநாதன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 'திருப்பரங்குன்றம் பிரச்சினையின் தொடர்ச்சியாக ஜூன் 22இல் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் 'முருக பக்தர்கள் மாநாடு' நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாநாட்டுக்காக சங்கபரிவார் அமைப்பினர் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பை மிக நுட்பமாக பரப்பும் விதத்தில் பரப்புரைகள் மேற்கொண்டு வருகின்றனர். வட மாநிலங்களில் ராமர் பெயரால் மத வன்முறையை நடத்தி வரும், அதே இயக்கங்கள் ஜூன் 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் மத வெறுப்பை, வன்முறையை விதைக்க தயாராகி வருகின்றனர். 

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு இதுவரை போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் சங்கபரிவார் அமைப்பினர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை போலீஸார் எப்படி அனுமதிக்கின்றனர்? மதுரையில் சங்கபரிவார் அமைப்புகள் நடத்தும் மாநாடு ஆன்மிக மாநாடு அல்ல, ஆன்மிகத்தின் பெயரில் நடத்தப்படும் அரசியல் மாநாடு. 

எனவே அமைதி பூங்காவான தமிழ்நாடும், மத நல்லிணக்க மாநகரமான மதுரையும் குஜராத், உத்தரப் பிரதேசம் போல் மாறாமல் இருக்க ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும்' என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி