மதுரை: பள்ளி மாணவர்களுக்கு கட்டணச் சலுகை

சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி 2023, கடந்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசுத் துறைகள் சார்பில் 26 அரங்குகளும், மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஆவின் ஆகியவற்றின் சார்பில் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, பல்பொருள் விற்பனை அரங்குகளும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. 

இந்தப் பொருள்காட்சியை இதுவரை 1.53 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ரூ.21.60 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் 20 நாள்களுக்கு தொடர்ந்து இந்தப் பொருள்காட்சி நடைபெறவுள்ளது. பொருள்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறார்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்பட்டது. இனிவரும் நாள்களில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணச் சலுகைகள் அளிக்கப்படவுள்ளன. 

இதன்படி, பள்ளி அடையாள அட்டையுடன் வரும் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.5 மட்டுமே வசூலிக்கப்படும். இதேபோல், ராட்டினங்களுக்கான கட்டணத்திலும் 20 சதவீதம் விலக்கு அளிக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி