அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனமகிழ் மன்றங்கள் கூட்டுறவுச் சங்கங்களின் விதிப்படி செயல்படுகின்றன. கூட்டுறவு சங்கங்களின் கீழ் அனுமதிக்கப்படும் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சோதனை செய்ய வேண்டும். ஆனால், இதுபோன்ற சோதனைகள் நடைபெறுவதில்லை.
இதுதொடர்பான புகார்களையும் பதிவுத் துறை முறையாக விசாரிக்கவில்லை என்பது பொதுவான புகாராக உள்ளது. எனவே, கூட்டுறவுச் சங்கங்களின் விதிப்படி பதிவு செய்துள்ள சங்கங்கள், மன்றங்களின் ஆவணங்கள், செயல்பாடுகள் முறையாக உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய பதிவு துறைத் தலைவர், அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். சங்கங்கள், மன்றங்களில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாகப் புகார் எழுந்து, குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், தொடர்புடைய அமைப்பின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், பதிவுத் துறை, மதுவிலக்கு அமலாக்கத் துறையினர் இணைந்து, ரெட்போர்ட் மனமகிழ் மன்றம் தொடர்பாக முறையாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.