குளித்தலை: பட்டவன் கோயிலில் மாலை தாண்டும் திருவிழா

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பேரூர் ஊராட்சி ஊராட்சியில் தாசில்மாதாநாயக்கர் மந்தை சார்பில் பசுமேக்கிப்பட்டியில் பட்டவன் கோவில் திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான இன்று (ஜூன் 5) 16 மந்தைகளிலிருந்து சாமி காளை மாடுகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. 

பின்னர் கோவில் முன்பு உறுமி மேளம் முழங்க காளை மாடுகளை அழைத்து வந்தவர்களுக்கு விழா குழு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கன்னி பெண்கள் மாலை தாண்டும் இடத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து காளை மாடுகளை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்து விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் திருச்சி மாவட்டம் முசிறி பகுதி தொட்டியப்பட்டியைச் சேர்ந்த காளை முதலாவதாக வந்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற காளைகளுக்கு கோவில் சார்பில் எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் உறுமி மேளம் முழங்க தேவராட்டம் நடைபெற்றது. 

விழாவில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி