குளித்தலை: போதைப்பொருள் தடுப்பு முகாமில் டிஎஸ்பி எச்சரிக்கை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி இரும்பூதிபட்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் குளித்தலை காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் நேற்று (டிசம்பர் 29) நடைபெற்றது. 

குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன், மகளிர் காவல் ஆய்வாளர் கலைவாணி, சிவாயம் ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி, முகாம் வருவாய் ஆய்வாளர் பாலு, முகாம் தலைவர் மகேந்திரதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பொதுமக்கள் விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவது குற்றமாகும். 

இச்செயலில் ஈடுபடும் பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்தார். பொதுமக்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்த்தலும், சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றுதல், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட செயல்களில் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை காவல்துறை ஆய்வாளருக்கு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விரிவாக பேசினார். இந்த விழிப்புணர்வு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வருவாய்த்துறையினர், காவல் துறையினர், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி