கரூர்: பரோட்டா கடையில் மது போதையில் ரகளை; பரபரப்பு வீடியோ

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்கக்கேட் அருகே மணப்பாறை செல்லும் சாலையில் ஆறுபடை என்ற பெயரில் மினி ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் இன்று காலை 2 இளைஞர்கள் மதுபோதையில் புரோட்டோ பார்சல் வாங்கிவிட்டு பணம் தராமல் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வந்து ரோஸ்ட் கேட்டுள்ளனர். அதற்கு கடை உரிமையாளர் கந்தசாமி பில் கேட்டதாகவும், அதற்கு பில் இல்லை தரமாட்டேனா என கேட்டுள்ளனர். பாக்கிக்கு தரமுடியாது என கூறியதற்கு கடையை அடித்து நொறுக்கிவிடுவோம் என மிரட்டி, இருவரும் ஹோட்டல் உரிமையாளர் சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். 

மேலும் கடையின் முன்பக்கத்திலிருந்த முட்டைகள் வைத்திருந்த அட்டைகளை கட்டையால் அடித்தும், அருகில் உள்ள டிவி ரிப்பேர் செய்யும் கடையின் முன்பக்கத்தில் இருந்த டிவிகளை கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் ஹோட்டலில் இருந்த பெண்ணையும் தகாத வார்த்தைகளால் பேசியவாறு அங்கிருந்து பைக்கில் கிளம்பி சென்றுள்ளனர். இது குறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஒரு இளைஞரை மட்டும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி கேமரா பதிவில் போதை இளைஞர்கள் தகராறு செய்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி