கரூர்: மாசி மகத்தை முன்னிட்டு முனிமுக்தீஸ்வரர் கோயில் தேரோட்டம்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், சின்னதாராபுரத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை முனிமுக்தீஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 5ஆம் தேதி விநாயகர் வழிபாடு, கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்லக்கு மற்றும் சிம்மவாகனம், காமதேனு வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம் ஆகிய வாகனங்களில் சாமி திருவீதி உலா நடந்தது. 

இதனைத் தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி உடனுறை முனிமுக்தீஸ்வரர் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கடைவீதியில் உள்ள தேர் நிலையிலிருந்து மேளதாளத்துடன் புறப்பட்டு மாரியம்மன் கோவிலில் வந்தடைந்தது. இரவு முழுவதும் பொதுமக்கள் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் மதியம் 2 மணிக்கு அதன் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இடம் பிடித்து இழுத்தனர். 

இதற்கான ஏற்பாடுகளை முனிமுக்தீஸ்வரர் திருப்பணி குழு மன்றம் மற்றும் கட்டளைதாரர்கள், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சின்னதாராபுரம் போலீசார் செய்திருந்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி