சேலம் மாவட்டம் வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரி சங்கர் வயது 36. இவர் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் பழைய நகைகளுக்கு புதிய நகைகள் கொடுப்பதாகவும், டெபாசிட் செய்த தொகைக்கு அதிக வட்டி கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி வெள்ளியணை அருகே உள்ள சின்ன மூக்கணாங்குறிச்சி சேர்ந்த ராமலிங்கம் வயது 44 என்பவர் தனது பேரிலும், குடும்பத்தார் பேரிலும் அந்த நிறுவனத்தில் ரூபாய் 17 லட்சம் முதலீடு செய்தார்.
முதலீடு செய்த பணத்திற்கு அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டபடி வட்டி மற்றும் முதலீட்டுத் தொகை திருப்பித் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ராமலிங்கம், கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, சபரி சங்கரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.