சட்டவிராத கல்குவாரி இயக்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அரசின் அனுமதி முடிந்தும் க. பரமத்தி, தென்னிலை பகுதியில் தனியார் கல் குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக பல்வேறு ஆதாரங்களை வழங்கி, புகார் மனு கடந்த சில மாதங்களாக அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், கடந்த மாதம் நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும், வாரந்தோறும் நடைபெறும் திங்கள் தின பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திலும் மனு அளித்திருந்தார். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற சென்னை கிளையிலும் வழக்கு தொடுக்க இருப்பதாக முகிலன் கூறியிருந்தார்.
இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகார் அடிப்படையில், மே18 ம் தேதி புகழூர் வட்டத்தில் உள்ள க. பரமத்தி, தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் தனியார் கல்குவாரிகளை புவியியல் சுரங்கத் துறை துணை இயக்குனர் ஜெயபால் தலைமையில் சுரங்கத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, புகலூர் வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட சுரங்கத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.