கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன் மனைவி
பழனியம்மாள் வயது 30.
பழனியம்மாள் கடந்த இரண்டு வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் விரக்தி மனநிலையில் வாழ்ந்து வந்த பழனியம்மாள், ஜூலை 24ஆம் தேதி காலை 9 மணியளவில் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இதனை அறிந்த பழனியம்மாளின் தாயார் அடக்கம்மா வயது 66 என்பவர், தனது மகளை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி ஜூலை 27ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அடக்கம்மா அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பழனியம்மாளின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன சின்னதாராபுரம் காவல்துறையினர்.