குளச்சல்: இரவில் அரசு பஸ் கண்டக்டரை குத்த முயன்றவர் கைது

குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் தாணுதாஸ் (37). இவர் திங்கள் நகர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பணிக்குச் சென்றுவிட்டு, பணி முடிந்து அங்கிருந்து தனது பைக்கில் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அஞ்சாலி திருப்பு என்ற பகுதியில் வரும்போது சாலையை மறித்தபடி கார் நின்றதால் ஹாரன் அடித்துள்ளார். அப்போது அந்தக் காரிலிருந்து இறங்கிய வாலிபர் தாணுதாசிடம் தகராறு செய்து கத்தியால் அவரைக் குத்த முயன்றுள்ளார். உடனடியாக பைக்கை எடுத்துக்கொண்டு தாணுதாஸ் சென்றுள்ளார். 

ஆனால் அந்த வாலிபர் காரில் ஏறி பைக்கைப் பின்தொடர்ந்து பைக்கில் மோத முயன்றார். இதில் நிலைதடுமாறி பைக் ஓடையில் விழுந்தது. இதைத் தொடர்ந்து அந்தக் கார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து சென்றுள்ளது. இதுதொடர்பாக தாணுதாஸ் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த அனிஷ் (34) என்பவரை நேற்று கைது செய்தனர். அனிஷ் அந்தப் பகுதியில் கோழிக்கடை நடத்தி வருவதாகத் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி