களியக்காவிளை: புதிய பேருந்து நிலைய பணி அமைச்சர்  ஆய்வு

களியக்காவிளையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலைய பணியினை, பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் இன்று (05.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசுகையில், களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.9.20 கோடி மதிப்பீட்டில் களியக்காவிளை புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இப்பேருந்து நிலையமானது தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என்று மூன்று தளங்களைக் கொண்டது. தரைத்தளத்தில் 4 கடைகள், 2 அலுவலகங்கள், 4 ஆண்கள் கழிப்பறைகள் மற்றும் 6 பெண்கள் கழிப்பறைகளும், முதல் தளத்தில் 2 அலுவலகங்கள், 4 கடைகளும், 3 ஆண்கள் கழிப்பறைகளும், 5 பெண்கள் கழிப்பறைகளும், இரண்டாம் தளத்தில் மூன்று கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், களியக்காவிளை பேரூராட்சித் தலைவர் சுரேஷ், செயல் அலுவலர் சந்திரகலா, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி