அருமனை: வங்கி ஊழியர் வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளை

அருமனை அருகே மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியர். இவரது மனைவி தபால் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். சுபாஷ் வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் அவரது மனைவி தாய் வீட்டில் தங்கி விடுவார். கணவர் வரும்போது மட்டும் வீட்டுக்கு வருவார். இதனால் பெரும்பாலான நாட்கள் வீடு பூட்டியே கிடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் சுபாஷ் மனைவிக்கு போன் செய்து வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார். 

இதை அடுத்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து சுமார் 35 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. மேலும் கொள்ளையர்கள் சில நகைகளை கொண்டு செல்லாமல் வீட்டில் வீசி எறிந்துள்ளனர். இது குறித்து அருமனை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி