சின்னமுட்டம் படகு தளத்தில் விசைப்படகு தீயில் எரிந்து சாம்பல்

சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகம் அருகே உள்ள பிள்ளை தோப்பு பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கு புதிய விசைப்படகு கட்டும் பணி அங்குள்ள படகு தளத்தில் நடந்து வந்தது. இந்த படகில் சுமார் 75 சதவீத பணிகள் முடிவடைந்து இறுதி கட்ட வடிவமைப்பு பணிகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் நேற்று (29-ம் தேதி) மதியம் 4 தொழிலாளர்கள் படகு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென படகின் கீழ் தள பகுதியில் இருந்து புகை வந்து தீ பிடித்து எரிய தொடங்கியது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ வேகமாக பரவி கொளுந்து விட்டு எரிந்தது. அந்த பகுதி புகை மண்டலமாக மாறியது.

இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திலிருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிக காற்று காரணமாக தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். தீயில் கருகிய படகின் சேத மதிப்பு சுமார் ரூ. 40 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி