புதுக்கடை: ஆலய விழாவில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி

புதுக்கடை அருகே கடற்கரை கிராமமான இனயம் புத்தன்துறை என்ற பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விழா நிறைவு பெறும் நிலையில் அலங்கார தேர் பவனி நடப்பதாக இருந்தது. 

இதற்காக தேர் செல்லும் பகுதிகளில் தேர் செல்ல தடையாக உள்ள பொட்களை அகற்றும் பணி நேற்று மாலையில் நடைபெற்றது. இதற்காக மிக உயரமான வண்டி போல உருட்டி செல்லும் ஏணியை பயன்படுத்தி, தடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏணியை அதே பகுதி விஜயன் (52), ஜங்கதீஸ் (33), சோபன் (45), மதன்(42) ஆகிய 4 பேர் உருட்டி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் மேல் பகுதியில் சென்று கொண்டிருந்த மின்சார வாரியத்தின் உயர் மின்னழுத்த கம்பியில் ஏணி உரசியது. 

இதில் ஏணியில் மின்சாரம் பாய்ந்து ஏணியை உருட்டி சென்ற 4 பேரும் ஏணியில் இருந்து விடுபட முடியாமல் தவித்தனர். உடனே பொதுமக்கள் கூடி அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் யாருக்கும் பக்கத்தில் நெருங்க முடியவில்லை. 

ஏணியில் சிக்கிய 4 பேர் மீதும் தீப்பொறி பற்றி எரிந்ததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து 4 பேரும் உடல் கருகி சம்பவ இடத்தில் பலியாகினர். மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர், 4 பேர் உடல்களும் குமரி மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி