குப்பையை தரம் பிரிக்கவும், உரம் தயாரிக்கவும் ஊராட்சிகளில் உரக்குடில் அமைக்கப்பட்டது. துாய்மை பணியாளர்கள் குப்பையை சேகரித்து, மட்கும் மற்றும் மட்காத வகைகளை தனியாக பிரித்து, மட்கும் குப்பையை உரமாக்குவது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் செயல்பாடாக உள்ளது. ஆனால், சிங்கபெருமாள் கோவில், வண்டலூர், ஊரப்பாக்கம், கொண்டமங்கலம் உட்பட பெரும்பாலான ஊராட்சிகளில், குப்பையை தரம் பிரிக்கும் பணிகள் முறையாக நடக்கவில்லை. பொதுமக்களும் விழிப்புணர்வு இல்லாமல், குப்பையை தரம் பிரிக்காமல் மொத்தமாக கொட்டுவதால், பணியாளர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட ஊராட்சியில், நீர்நிலைகளில் குப்பை கொட்டப்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால், பகுதிவாசிகள், வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.