செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 03 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், நாள்தோறும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்கள் மீது உற்சவர் ஸ்ரீ கந்தசாமி பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 13ஆம் நாள் உற்சவமான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் புஷ்ப அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பூஜை பரிகாரங்கள் செய்யப்பட்டு மேளதாளங்கள் வாணவேடிக்கை முழங்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் முருகப்பெருமான் வள்ளிக்கு திருமங்கலம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர், மலர் அலங்காரத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தம்பதி சமேதராய் எழுந்தருளி மயில் வாகனத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து நான்கு மாத வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது.