திருக்கழுக்குன்றத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து பேரணி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்று, பெண் வன்கொடுமைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் மது, கஞ்சா பயன்படுத்துவோர் பெண்களை எவ்வாறு தாக்குகிறார்கள் என்பது போன்ற மைமிங் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சமூக ஆர்வலர் பரஞ்ஜோதி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி