அருங்குணம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அருங்குணம் ஊராட்சியில், நூறாண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த உற்சவம், கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும், சுமித்திரை திருமணம், பகடை ஆடுதல், துகில் உரிதல், அபிமன்யூ சண்டை, அர்ஜூனன் தபசு, கர்ணன் போர் என மகாபாரத தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. இன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்தனர். அந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.