செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகள் நிஷாந்தினி வயது (23). இவர், பல்லாவரம் பகுதியில் தனியார் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று(அக்.01) காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக மாணவி நிஷாந்தினி இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள சாலை வளைவு பகுதியில் செங்கல்பட்டு- கல்பாக்கம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்தும், மாணவி சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட மாணவி நிஷாந்தினி தலையில் பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருக்கழுக்குன்றம் போலீஸார் மாணவியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருக்கழுக்குன்றம் போலீசார் தப்பி சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.