செங்கை அரசு பள்ளி வளாகத்தில் புத்தக குடோனில் தீ விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள ராமானுஜம் பிளாக்கில், செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளி மாணவ -- மாணவியருக்கு வழங்கப்படும் புத்தகங்கள் குடோன் உள்ளது. இதில், நடப்பு கல்வியாண்டில் மாணவ -- மாணவியருக்கு வழங்கப்பட்டு, மீதம் இருந்த புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், நேற்று (அக் 1) மதியம் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து புகை வெளியேறியது. இதனைக் கண்ட என். எஸ். எஸ். , மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வில்லியம்ஸ், காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மறைமலை நகர் போலீசார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், நுாற்றுக்கணக்கான புத்தகங்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், அறையில் இருந்த அனைத்து புத்தகங்களும் தண்ணீரில் நனைந்து பாழாகின.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக தீ வைத்து தப்பிச் சென்றனரா என, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி