செங்கை: குழந்தைக்கு பாலியல் தொல்லை... ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 3 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்கிற கார்த்திக் (31) என்பவர், கடந்த 2022 பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 4:30 மணியளவில், அங்கு விளையாடிய குழந்தையை கடத்திச்சென்று, தன் வீட்டில் பாலியல் தாக்குதல் செய்தார். இதுகுறித்து, குழந்தையின்பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். 

இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார். வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், 3,000 ரூபாய் அபராதம் விதித்தும், நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீடாக, 3.5 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி