3 அடி முதல் 5 அடி ஆழம் வரை மட்டுமே மண் அள்ள வேண்டும் என்ற விதிகளை மீறி, அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டு புதிய கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு, ஒரு லோடு 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததால், ஒரு மாத காலமாக ஏரியில் மண் எடுப்பது தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும், ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மண் லோடு ஏற்றிக்கொண்டு, தார்ப்பாய் போட்டு மூடாமல், செங்கல்பட்டு - திருப்போரூர் நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் சென்று வந்தன.
இதன் காரணமாக இயற்கை வளம் கொள்ளை போவதுடன், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விதிமீறி மண் எடுக்கப்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.