செங்கல்பட்டு: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பழுது

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாத்துார் ஊராட்சியில், முனியந்தாங்கல் செல்லும் சாலையோரம் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு, குடிநீர் சேவை துவங்கப்பட்டது. அதில், 5 ரூபாய் நாணயம் போட்டால், தானியங்கி இயந்திரம் வழியாக 20 லிட்டர் குடிநீர் பிடிக்க முடியும். 

இதனால் தண்ணீர் வீணாகாமல் தவிர்க்கப்பட்டது. இந்த வசதியால் பலர் பயனடைந்தனர். மாத்துார், முனியந்தாங்கல் மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும், இருசக்கர வாகனங்களில் சென்று, குடிநீர் கேன்கள் மற்றும் குடங்களில் தண்ணீர் பிடித்துச் சென்றனர். விசேஷ நாட்களில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

ஆனால், இந்த இயந்திரம் தற்போது, கடந்த சில மாதங்களாக பழுதடைந்து, பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இது குறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அச்சிறுபாக்கம் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், இது குறித்து ஆய்வு செய்து, முனியந்தாங்கல் கூட்டுச் சாலையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை பழுது நீக்கி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி