திருப்போரூர் ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயிலில் தேர் திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில், இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி பெருமான் வீதியுலா வரும் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்படி, புருஷாமிருகம் உற்சவம், வெள்ளி மயில் வாகனம், பஞ்சமூர்த்தி உற்சவம் முடிவுற்று இன்று காலை திருத்தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கந்தசாமி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

கோவில் வளாகத்தில் துவங்கிய தேர் பவனி நான்கு மாட வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கோஷமிட்டு தேரை வலம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் சிவ வாத்தியம் முழங்க கந்தசாமி பெருமானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி