இந்த சிப்காட் சாலைகளின் வழியாகவே, மேற்கூறிய கிராமத்தினர் சென்று வருகின்றனர். இந்த நிலையில், சிப்காட் சாலையில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு வரும் கன்டெயினர் லாரி, நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சிப்காட் சாலையின் இரண்டு பக்கங்களிலும் வரிசைக்கட்டி நிறுத்தப்படுகின்றன. சிப்காட் நிறுவனத்தின் வாயிலாக, தொழிற்சாலைகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்த, கனரக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டும், இவ்வாறு சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால், மற்ற நிறுவனங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், வழியின்றி சிரமப்படுகின்றனர்.
மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிடும்போது, சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் மோதி, விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். ஒரகடம் சிப்காட் ரோந்து போலீசார், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.