செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட இந்தளூர் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்புகளைச் சார்ந்த மாணவிகள் பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகம் மற்றும் பள்ளியில் உள்ள கழிப்பறைகளை துப்புரவு செய்ய பள்ளி நிர்வாகம் மாணவிகளை வைத்து துப்புரவு பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்புரவு பணியானது தினம் தோறும் மாணவிகளை கட்டாயப்படுத்தி பள்ளி வகுப்பறைகளை தூய்மை செய்யும் பணியாக வழங்கப்படுகிறது. குறிப்பாக எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் குழுக்களாக பிரித்து துப்புரவு பணியை செய்து வருவதாகவும்,
மாணவிகள் கை வலி, தலைவலி, வயிற்று வலி இருந்தாலும், தேர்வு நேரம் படிக்க வேண்டும் என சொன்னாலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரமணி கட்டாயப்படுத்தி எங்களை துப்புரவு பணி செய்ய சொல்வதாக அரசு பள்ளி மாணவிகள் வருத்தத்துடன் பேசும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. எனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் அரசு பள்ளியின் ஆசிரியர்கள் மீது துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.