காஞ்சியில் முறைகேடு; பரபரப்பு போஸ்டர்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமாக விளங்கும் இக்கோவிலில், ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், ராமானுஜரை தரிசனம் செய்து செல்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவிலில், அலுவலக ரீதியாக பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், புரட்சி மகான் ஸ்ரீ ராமானுஜரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே என, ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அதில், ஓய்வு பெற்றவரை மீண்டும் நியமித்தது ஏன்?, ராமானுஜருக்கு அணிவித்த முத்துமணி மாலை எங்கே?, தொன்று தொட்டு காலமாக அதிகேசவப் பெருமாளையும் ராமானுஜரையும் தோலில் சுமந்து செல்லும் பாதாங்கிகளுக்கு பதிலாக புதியதாக வெளியூர் ஆட்களை நியமித்தது ஏன்?, 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ராமானுஜர் மணிமண்டபத்தை பூட்டியே வைத்து பக்தர்களை ஏமாற்றுவது ஏன்? என, காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது, பக்தர்களையும் பொதுமக்களையும் மத்தியில் பல சந்தேகங்களையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி