காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, சுங்குவார்சத்திரம் அருகே, எடையார்பாக்கத்தில், அரசு நிலத்தில் தனியார் ஒருவர் சாய்பாபா கோயில் கட்டியிருந்தார். அதன் அருகில், ஊராட்சியின் தொலைக்காட்சி அறை இருந்தது. அந்த அறையில், அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஆக்கிரமித்து வசித்து வந்தார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், ஸ்ரீபெரும்புதுார் பி. டி. ஓ. , பவானி தலைமையில், போலீசார் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். சாய்பாபா கோயில் கட்டிய தனி நபர், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மூதாட்டி 10 நாட்கள் கால அவகாசம் கேட்டதன் அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில், நேற்று (அக்.,3) ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் சதீஷ் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் பி. டி. ஓ. , பவானி தலைமையில் மூதாட்டியின் வீடு மற்றும் அதன் அருகில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சாய்பாபா கோவிலை இடித்து அகற்றினர். இவர்களுடன் சுங்குவார்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.