கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியில் உள்ள இரண்டு மதகுகளில் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து, தண்ணீர் வீணாகி வெளியேறி வந்தது. ஆண்டுதோறும் பருவ மழைக் காலங்களில், விவசாயிகள் தங்கள் சொந்த செலவில், 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக மதகு பகுதியில் மண் கொட்டியும், மணல் மூட்டைகளை அடுக்கியும், தண்ணீர் வெளியேறுவதை தடுத்து வந்தனர். விவசாய பயன்பாட்டிற்கு தேவைப்படும் போது, மண் மூட்டைகளை அப்புறப்படுத்தி, தண்ணீரை திறந்து பயன்படுத்தி வருகின்றனர்.
பழுதடைந்த இரு மதகுகளையும் புதிதாக கட்டித் தரக்கோரி, நீர்வளத்துறை மற்றும் மாவட்ட கலெக்டருக்கு பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கோடை காலத்தில் தண்ணீர் இல்லாத போது, புதிய மதகுகள் கட்டி, தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.