வடமாநிலத்தவர் குவிந்ததால் திணறிய தாம்பரம் ரயில் நிலையம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, ஜார்க்கண்ட் மாநிலம், ஜஷிடித் பகுதிக்கு வாரத்திற்கு ஒரு முறை, விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், பெண்களுக்கான பெட்டி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் என, 20 பெட்டிகளை உடையது.

வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வேலை செய்துவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று (செப்.4) ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் குவிந்தனர்.

ஜார்கண்ட் மாநிலம், ஜஷிடித் பகுதிக்கு செல்லும் ரயிலுக்காக, அவர்கள் காத்திருந்தனர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட ரயில் வந்ததும், ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். ஏராளமானோர், பெண்களுக்கான பெட்டியில் ஏறி அமர்ந்ததால், அதிலிருந்த பெண்கள் கூச்சலிட்டனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது.


பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பெண்கள் பெட்டிகளில் ஏறிய ஆண்களை இறக்கி, பெண்களை உள்ளே அமர வைத்தனர். ஆனாலும், கடுமையான கூட்ட நெரிசல் இருந்தது. ரயில் புறப்பட்ட போது, ஆண்கள், பெண்கள் படிக்கெட்டில் தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணித்தனர்.

தொடர்புடைய செய்தி