முகூர்த்த நாட்களில் குன்றத்தூர் முருகன் கோவிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன. இதனால், ஒரே நேரத்தில் குன்றத்தூர் நகரத்திற்குள் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், குன்றத்தூரில் உள்ள பிரதான சாலைகள் இரு வழிச்சாலைகளாக குறுகலாக உள்ளன. இந்த சாலைகளில் இருபுறமும் உள்ள வணிக கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்துவதால், சாலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், பீக் ஹவர்ஸ் நேரமான காலை 8:00 முதல் 10:00 மணி வரை, மாலை 6:00 முதல் 8:00 மணி வரை மிக கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் குன்றத்தூர் நகரத்தில் உள்ள ஒரு கிலோமீட்டர் சாலையை கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது. இதனால், பொதுமக்கள், பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், பீக் அவர்ஸ் நேரங்களில் கனரக வாகனங்கள் குன்றத்தூர் நகரத்திற்குள் வந்து செல்வதை தடை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.