கடந்த 40 ஆண்டுகளாக கொட்டப்படுவதால், பல ஆயிரம் டன் குப்பை மலைபோல் தேங்கியது. துர்நாற்றம், கொசு மற்றும் ஈ தொல்லையும் அதிகரித்து, கன்னடபாளையம் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். தோல் பாதிப்பு, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் அதிகரித்தன.
மேலும், நிலத்தடி நீர் மாசடைந்து, அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இப்பகுதிவாசிகள், குப்பைக் கிடங்கை காலி செய்து, மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று போராடினர்.
கடந்த 40 ஆண்டுகள் போராட்டத்தின் விடிவாக, பல மாதங்களுக்கு முன் அங்கிருந்த குப்பை முழுதுமாக அகற்றி, ஆப்பூர் அருகேயுள்ள கொளத்துாரில் கொட்டினர். அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், மீண்டும் குப்பையை கொட்டி, மலைபோல் தேக்கி விட்டனர்.
சமீபத்தில் குப்பைக் கிடங்கு தீப்பிடித்து எரிந்து, அப்பகுதி வாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து, அங்குள்ள குப்பையை, லாரிகள் வாயிலாக கொளத்துாருக்கு எடுத்துச் செல்லும் பணி துவங்கியுள்ளது.